ஆலயமணியின் ஓசையை-பாடல் 416-aalaya maniyin osayai

“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்”

தபலாவின் நிலையான ரிதத்தில் தார் சாலையில் ஓடும் சொகுசு கார் போல சீரான வேகத்தில் ஒலிக்கும் இப்பாடலை கேட்கும் சுகமே அலாதி.
முன்னிசையில் வேகமாய் ஒலிக்கும் வயலின்களும் கிதாரின் மெல்லிய இசையும் ஒரு நவீனத்துவ உணர்வை தரும் பாடல்.

இந்தப் பாடலின் பின்னணியில் ஏதோ ஒரு செவ்வியல் இசையின் ராகம் அடித்தளமாக இருக்கக் கூடும்.
அந்த ராகம் முழுமையாய் வெளிப்பட்டாலும் இல்லையெனினும் கேட்கும் பாமரர்க்கு பாடலின் சுகானுபவத்தில் ஒரு துளியும் குறைவு ஏற்படுவதில்லை.

காரணம் இதன் மெட்டு நம் இதயத்தில் நுழைந்து நம் உணர்வுகளைத் தொட்டு மறக்க முடியாத தாக்கத்தை விட்டுச் செல்வதுதான்.

செவ்வியல் இசையின் அடித்தளத்தை இழக்காமல், அதே சமயம் அதன் மேல் நவீனத்துவம் பொலியும் ஒரு கவின் மிகு மெல்லிசை கோபுரம் எழுப்பும் திறமையால் அன்றோ அவர்கள் மெல்லிசை மன்னர்கள் ஆனார்கள்!

மனம் மயங்கும் மாலை நேரத்தில் நாயகி தன் காதலனைப் பற்றி பாடுகிறாள். சரோஜா தேவியின் அழகான முகமும்,அளவான நடிப்பும் காட்சிக்கு பலம் சேர்க்கிறது.

இசையரசியின் தெய்வீகக்குரல் ஆலயமணியின் நாதத்தையும் மிஞ்சி இதயத்தை ஊடுருவி அலைபாயும் மனதில் அமைதியை உண்டாக்குவது உறுதி.

“இரு விழியாலே மாலையிட்டான்”

“யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே”
போன்ற கவியரசின் வரிகள் சாகாவரம் பெற்றவை.
—————————
படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன்- ராம்முர்த்தி
குரல்: பி. சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
——————————
பாடல் வரிகள்:

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

இப்பாடலின் You Tube line கீழே தரப்பட்டுள்ளது.