சிலர் குடிப்பது போலே நடிப்பார்-பாடல் 424-silar kudippathu poley

  1. “சிலர் குடிப்பது போலே நடிப்பார்”

மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் . ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் பின்பு பலமாகச்
சிரித்தார் .

சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”

கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?

புரிந்து கொண்டார் கண்ணதாசன்… !

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்தது..
உடனே ‘சங்கே முழங்கு’ படப்பிடிப்புத் தளத்திற்குப் புறப்பட்டார். அங்கே எம்ஜிஆர் கவிஞரை வரவேற்றார். பாடல் எழுத தயாரானார்..! கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்” பாடலுக்கான பல்லவியில்… 
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!

“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”

“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :

“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது”

“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில முற்போக்கான விஷயங்களை சொல்ல வேண்டாமா..?

“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்…

“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!

மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ..?

நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு.. !”

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போது தெரிகிறதா..?”

ஆம்…!
யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் வித்தை ..கவிஞருக்கும் தெரிந்திருந்தது.
———————–
படம்: சங்கே முழங்கு
இசை :எம் .எஸ் .விஸ்வநாதன்
பாடியவர் :டி .எம் . எஸ்
வரிகள் :கண்ணதாசன்
———————–
பாடல் வரிகள்:

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்

புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

இப்பாடலின் YouTube link கீழே.

2 thoughts on “சிலர் குடிப்பது போலே நடிப்பார்-பாடல் 424-silar kudippathu poley

Comments are closed.